மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது. இந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.
எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும். இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர். அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.
இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது. இந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
மல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.
லாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும். சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம். எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது. ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.
எல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.
மனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.
No comments:
Post a Comment